திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை |
பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி யூரரே.
|
1 |
பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே.
|
2 |
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
குரவம்ட நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே.
|
3 |
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றார்அன்னி யூரரே.
|
4 |
எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே.
|
5 |
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே.
|
6 |
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே.
|
7 |
காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.
|
8 |
எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி யூரரே.
|
9 |
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் அன்னி யூரரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |